Blogger Tricks

Monday, November 2, 2015

#BAAC 9 ஸ்ரீ வேங்கடரமண பாகவதர் ஜெயந்தி - வித்வான் செம்மங்குடி ஸ்ரீனிவாசய்யர் பிரசங்கம்

ஸ்ரீ வேங்கடரமண பாகவதர் ஜெயந்தி #BAAC 9

வித்வான் செம்மங்குடி ஸ்ரீனிவாசய்யர் பிரசங்கம்

தஞ்சாவூர், மார்ச், 3 (1978) - நம் நாட்டில் வாழ்ந்த சுதேச மன்னர்கள் இசைக் கலைக்கு ஆற்றிய தொண்டு மகத்தானது. அதை இசைக் கலைஞர்கள் என்றும் மறக்க முடியாது என்று நேற்று அய்யம்பேட்டை ராமச்சந்திரபுரத்தில் நடைபெற்ற சத்குரு ஸ்ரீ தியாகப் பிரும்மத்தின் பிரதம சிஷ்யர் ஸ்ரீ வேங்கடரமண பாகவத ஸ்வாமிகளின் 197 – வது ஜெயந்தி விழாவை தொடங்கி வைத்து சங்கீத கலாநிதி செம்மங்குடி திரு. ஆர். ஸ்ரீனிவாசய்யர் பேசுகையில் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில் தஞ்சையை ஆண்ட மன்னர்களின் கலை ஆர்வ நினைவுச் சின்னமாக சங்கீத மஹாலும், சரஸ்வதி மஹாலும் இன்றளவும் விளங்கி வருகிறது. திருவாங்கூர், கொச்சி, பரோடா முதலிய சமஸ்தான அதிபர்கள் ஆஸ்தான வித்வான்களாக கலைஞர்களை நியமித்து அவர்களுக்கு ஆதரவு காட்டி பெருமை தேடித் தந்தார்கள். அப்படிப்பட்ட மன்னர்கள் இன்று இல்லை என்றாலும், மன்னர்களாக விளங்கும் மக்கள் தான் கலையை வளர்க்க வேண்டும். வாலாஜாப்பேட்டை வேங்கடரமண பாகவதர் இல்லை என்றால் மஹான் தியாகப் பிரும்மத்தின் வாழ்க்கைச் சரிதம் நமக்குப் பூரணமாகக் கிடைத்திருக்காது. தியாகராஜரைப் பற்றியே வேங்கடரமணர் மூன்று கிருதிகள் இயற்றியிருக்கிறார். 

வேங்கடரமணருக்கு பாகவதர் என்ற பட்டத்தை கொடுத்ததே பகவான் என்று சொல்வார்கள். 

அவர் இயற்றிய சுரங்கள், கிருதிகள், தில்லானாக்கள் அழகிய வடிவில் உள்ளன. சுவரம், வர்ணம், கீர்த்தனங்கள் எல்லாவற்றிலும் ஸ்வாதிக் திருநாளுக்கு இணையாக இயற்றிக் கொடுத்த பெருமை வேங்கடரமணருக்கு உண்டு. அபூர்வ ராகங்களான நாத விநோதினி, ஜோதிஷ ரூபினி முதலிய கிருதிகளை இயற்றி பெருமைப்பட்டவர். 

ஆனால் சில கிருதிகள் கிருதிகளாக இருப்பதே நல்லது. அதைப் பாடத் தொடங்குவது அசட்டுத்தனம். பாடுவதால் தானும் சிரமப்பட்டுக் கொண்டு ரசிகப் பெருமக்களையும் சிரமப்படுத்தி அவர்களைக் குழப்பக் கூடாது. இதை சொல்வதற்குக் காரணம் அந்தக் கிருதிகளை குறை கூறுவதற்காக அல்ல. அதை கையாள்வது கடினம். அந்தக் கடினத்தை மேதைகளின் மத்தியிலேயே கையாள முயலவேண்டும். பாமர மக்களின் மத்தியில் சரளமாக பயன்படுத்த முடியாது. மருந்து மாதிரி பயன்படுத்த வேண்டும். வேங்கடரமணரின் கிருதிகளில் கிடைத்தவை 150 என்றும் அவைகளில் சுரப்படுத்தப்பட்டவை 54 உருப்படிகள் என்றும் சமீபத்தில் தெரிந்து கொண்டேன். உடனே பாடம் பண்ண உட்கார்ந்தேன். மண்டையில் கோளாறு. ஏறவில்லை. அது வயது கோளாறு காரணமாகவும் இருக்கலாம். பாடப்பாட ராகம், மூட மூட ரோகம் என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அதனால் பாடகன் பாடிக்கொண்டே இருந்தால்தான் பெருமைப்படலாம். 

இந்த ஜெயந்தி விழாக் குழுவினர் மதுரை ஸௌராஷ்ட்ர சமாஜத்தில் இருக்கும் சுவடிகளை பிரசுரம் செய்ய முனைய வேண்டும். 1981 ம் ஆண்டு வேங்கடரமணரின் 200 வது ஜெயந்தி விழா கொண்டாடப்போவதாக கூறுகிறார்கள். அதற்குள் நூல்கள் அனைத்துமே அச்சாகி விட முயல வேண்டும் என்று கூறினார்.

பரமக்குடி ஸௌராஷ்ட்ர சபைத் தலைவர் திரு. கே.வி.கோவிந்தராம் விழாவிற்குத் தலைமைவகித்தார், திரு. எம்.ஆர். கண்ணையா யாவரையும் வரவேற்றார். பின்னர் மதுரை ஆந்திர பிரவசன திரு. ஆர்.ஆர். சுப்பையா பாகவதர் சங்கீத உபன்யாசம் சிறப்பாக நடைபெற்றது.

#BAACKSK

Credits: Archives from Sri Subramanian Obla 

On Sri Semmangudi Seenivasaier said about Walajapettai Srimath Venkataramana Bhagavatar.


No comments :

Post a Comment